Published : 18 Jun 2021 03:16 AM
Last Updated : 18 Jun 2021 03:16 AM

நலவாரிய அட்டையை புதுப்பிப்பதில் சிக்கல் தீப்பெட்டி தொழிலாளர்கள் தவிப்பு :

தீப்பெட்டி, பட்டாசு நலவாரிய அட்டைகள் புதுப்பிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக கடந்த 6 மாத காலமாக தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நலவாரிய அட்டையை புதுப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு இறுதியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் பின்னர் தீப்பெட்டி நலவாரிய அட்டையை புதுப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பித்தால் தீப்பெட்டி தொழில் என்பதே இல்லை என வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு நலவாரிய அட்டை வைத்துள்ள தொழிலாளர்கள் கடந்த 6 மாத காலமாக, புதுப்பிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, இவ்விவகாரத்தில் அரசு தனி கவனம் செலுத்தி, நலவாரிய அட்டையை புதுப்பிப்பதில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி கூறியதாவது:

கோவில்பட்டியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய அட்டை வைத்துள்ளனர். கடந்தஆண்டு கரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நலவாரிய அட்டையை புதுப்பிக்கும் முறையை கொண்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் வரை தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய அட்டையை புதுப்பித்து விட்டோம்.

ஆனால், அதன் பின்னர் தீப்பெட்டி, பொது வேலை செய்வோரின் அட்டைகளை புதுப்பிக்க முடியவில்லை. ஆனால்,கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய அட்டைகளை மட்டும் புதுப்பிக்க முடிகிறது. இதுகுறித்து கடந்த 6 மாத காலமாக முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டை வைத்துள்ளவர்களின் குழந்தைகளுக்கான பணப்பயன்களும் கிடைக்கவில்லை. இக்காலத்தில் தொழிலாளர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால் கூட, அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்.

எனவே, தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி, பணப்பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நலவாரிய அட்டைகளையும் புதுப்பிக்க வழிவகை செய்ய வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x