Published : 17 Jun 2021 03:11 am

Updated : 17 Jun 2021 03:11 am

 

Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

சிவசங்கர் பாபா டெல்லியில் கைது : விமானத்தில் சென்னை அழைத்து வரப்படுகிறார்

சென்னை

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து தமிழக சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அவரது பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபா மற்றும் அவரது பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தியது.


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாரதி, தீபா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாஉத்தரகான்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை விசாரிக்க சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது. போலீஸார் வருவதை அறிந்தசிவசங்கர் பாபா, மருத்துவமனையில் இருந்து தப்பித்து தலைமறைவானார்.

இந்நிலையில், சிவசங்கர் பாபா டெல்லியில் பதுங்கி இருப்பதை தமிழக சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து டெல்லி காஸியாபாத் பகுதியில் சித்தரஞ்சன் பார்க் அருகே தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சென்னை அழைத்து செல்ல போலீஸார் அனுமதி கேட்டனர். நீதிமன்ற அனுமதியின்பேரில் சிவசங்கர் பாபாவை இன்று (17-ம்தேதி) விமானத்தில் சென்னை அழைத்துவர உள்ளனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x