Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

தங்க நகைகளில் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசின் புதிய விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது

புதுடெல்லி

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத்திலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய விதிமுறை நேற்று (ஜூன் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது.

உலகில் அதிக அளவில் தங்கத்தை நுகரும் நாடாக இந்தியா உள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தை கண்காணிப்பதற்காக 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை இடும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்கள்படி இந்தியாவில் 4 லட்சத்துக்கும் மேலான நகை விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவற்றில் 35,879 விற்பனையாளர்கள் மட்டுமே இந்திய தர நிர்ணய கழகத்தின் ஹால்மார்க் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனில்பெரும்பாலான விற்பனையாளர்கள் தர நிர்ணய அங்கீகாரம் பெறாத தங்க நகைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

எனவே 2021 ஜனவரி 1-ம் தேதி முதல், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை செய்யப்பட்டு விற்பனை செய்வது கட்டாயம் என்கிற விதி அமலுக்கு வரும் என்ற அறிவிப்பை கடந்த 2019 நவம்பர் மாதத்தில் மத்திய அரசு வெளியிட்டது.

ஆனால் கரோனா பாதிப்பு காரணத்தினால் இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஜூன் 1முதல் இந்த விதி அமல்படுத்தப்படும் என்று கூறியது. பின்னர் மீண்டும் ஜூன் 15 வரை அவகாசம் வழங்கியது. தற்போது ஜூன் 15 (நேற்று) முதல் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டாய ஹால்மார்க் நடைமுறையின் மூலம் குறைந்த தரத்தில் தங்க நகைகள் விற்கப்படுவது நிறுத்தப்படும் என்றும், தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் ஏமாறாமல் பாதுகாக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளின் தரத்தை இந்திய தர நிர்ணயக் கழகம் மூன்றாம் தரப்பு சார்பாக உறுதி செய்கிறது.

இந்த கட்டாய ஹால்மார்க் முத்திரை நடவடிக்கை மூலம் இந்தியா உலக தங்க சந்தையின் மையமாக வளர்ச்சி அடையும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x