Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க - கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க சத்குரு வலியுறுத்தல் :

வேலை தேடி மக்கள் நகரங்க ளுக்கு இடம்பெயர்வதை தடுக்க கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வர்த்தகதலைவர்களிடம் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தினார்.

ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில்‘ஹியூமன் இஸ் நாட் ஏ ரிசோர்ஸ்’ (Human is not a Resource) என்றவருடாந்திர கருத்தரங்கு ஆன்லைன் வாயிலாக நேற்று முன்தினம் நடந்தது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 150 வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் சத்குரு பேசியதாவது:

உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலீடுகளில் பெரும்பகுதி 25 முதல் 30 முக்கிய நகரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், 160 கோடி மக்கள் வேலைவாய்ப்புக்காக நகரங்களுக்கு இடம்பெயர வேண்டி உள்ளது. மக்கள் எங்கு வாழ்கிறார்களோ, அங்கு தான் தொழில் வளர்ச்சி நடக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்காக மக்களை இடம்பெயரச் செய்வது சரியான முறை அல்ல. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகளவு உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் உங்கள்நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவீதத்தையாவது கிராமங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

தொழில் துறையின் தேவைக் கேற்ப அந்தந்த கிராமங்களில் உங்கள் நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை கண்டறிருந்து உங்கள் நிறுவனத்தின் சி.இ.ஓ.க்களாக உயரும் அளவுக்கு அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் மனித தன்மை கொண்ட இதுபோன்ற அம்சங்கள் மிகவும் அவசியம். இவ்வாறு சத்குரு பேசினார்.

முன்னதாக, இந்த 3 நாள் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில், தென் மேற்கு பிராந்தியத்தின் முன்னாள் ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அலோக் லேர், இண்டிகோ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ராஜ் ராகவன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x