Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி நியமனம் - எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு :

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார். கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, செய லாளராக கே.பி.அன்பழகன், பொருளாளராக கடம் பூர் ராஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பான்மையான இடங்களை கைப்பற்றி, 10 ஆண்டு களுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. 65 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் ஓபிஎஸ், முன்னாள் முதல்வர் பழனிசாமி இடையே போட்டி நிலவியது. இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 2 முறை நடத்தப்பட்டது. மே 10-ம் தேதி நடந்த கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும், எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பிற பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் அப்போது தேர்வு செய்யப்படவில்லை. இந்தப் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. அதேநேரம், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்குள் வலுவாக எழுந் தது. சட்டப்பேரவை பதவி மீது ஓபிஎஸ்ஸுக்கு ஆர்வ மில்லை எனறும், கட்சியில் பிரதான இடத்தையே அவர் விரும்புவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர், கொறடா, பொருளாளர் உள்ளிட்டவர் களை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நடந்தது. ஏற்கெனவே அறிவித்தபடி, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. தொண்டர்கள், கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா, துணை கொறடா, பொரு ளாளர், செயலாளர், துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை யார், யாருக்கு வழங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பேரவை பதவிக்கானவர்கள் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக சு.ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக்கான முக்கிய பதவிகள், 3 முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கோவில்பட்டி தொகுதியில் தோற்கடித்த காரணத்துக்காகவே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x