Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

நீட் தேர்வால் சிபிஎஸ்இ உள்ளிட்ட - அனைத்து தரப்பு மாணவர்களின் பாதிப்புகள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும் : ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்

சென்னை

நீட் தேர்வால் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தரப்பு மாணவர்களின் பாதிப்புகள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 10-ம் தேதி உத்தரவிட்டார்.

இக்குழுவில் சுகாதார துறைச் செயலர், சட்டத் துறைச் செயலர், பள்ளிக்கல்வி செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர் குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வால் தமிழ்வழிக் கல்விமாணவர்கள், மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து, தரவுகளுடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்வோம்.

அதேபோல, அரசு உதவி பெறும் பள்ளி, சிபிஎஸ்இ என அனைத்துத் தரப்பு மாணவர்களின் பாதிப்புகள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும். நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது என்பதுதான் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கருத்தாகும். எந்த அளவுக்குப் பாதிப்பு என்பதையே நாங்கள் ஆய்வு செய்வோம். ஆய்வறிக்கை ஒரு மாதத்துக்குள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

மாணவர்களுக்கு தற்போது நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்துநாங்கள் கருத்து கூற முடியாது. ஜூன் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளோம். தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு எத்தனைஆண்டுக்கான தகவல்கள் வேண்டும் என்பது குறித்த விவரங்கள் தற்போது சேகரிப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான மாணவர்களிடம் கருத்து கேட்கும் திட்டம் ஏதுமில்லை.

குழு வழங்கக்கூடிய ஆதாரங்கள் மக்கள் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும். அதை முன்னெடுத்து ஆய்வுகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x