Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், ஐ.ஜி உட்பட - ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்த உயரதிகாரிகள் : விழிப்புணர்வு ஏற்படுத்த நூதன முயற்சி

ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில்,மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர், மேற்கு மண்டல ஐஜி, கோவை சரக டிஐஜி, மாவட்ட எஸ்பி ஆகியோர் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்தனர்.

உலக ரத்த தான தினத்தை (ஜூன் 14) முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்காரா, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) ர.சுதாகர், துணைத் தலைவர் முத்துசாமி, மாநகர காவல் ஆணையர் தீபக்டாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் நேற்று ஒரே நேரத்தில் ரத்த தானம் அளித்தனர்.

பின்னர், ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறியதாவது: ஓராண்டில் ஆண்கள் 4 முறையும், பெண்கள் 3 முறையும் ரத்த தானம் செய்யலாம். அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், ரத்த பற்றாக்குறை உள்ள கர்ப்பிணிகள், ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளவர்கள் உட்பட பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் செலுத்த வேண்டியது அவசியம்.

18 வயது முதல் 60 வயது வரையுள்ள ஆரோக்கியமானவர்கள் ரத்த தானம் செய்யலாம். கொடையாளர்களிடம் இருந்து 300 மி.லி ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. ஒவ்வொருவரும் தானமாக வழங்கும் ஒரு யூனிட் ரத்தம் மூலம் 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும். கரோனா தொற்று காலத்தில் தன்னார்வ குருதி கொடையாளர்கள், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பு ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்தவர்கள் 3 நாட்கள் கழித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்வில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, மாநகர நகர் நல அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x