Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

பயனற்று கிடக்கும் சக்கர நாற்காலிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க கோரிக்கை

தேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்பட்டு, தற்போது பயனற்று கிடக்கும் சக்கர நாற்காலிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மற்றும்முதியோர் சிரமமின்றி வாக்களிக்க செல்ல ஏதுவாக சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் இரண்டு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,872 வாக்குச்சாவடி மையங்களில் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது பயன்படுத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் தற்போது பயன்பாடு இல்லாமல் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பயனற்று கிடக்கும் இந்தசக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பல லட்சம் செலவு செய்து மாற்றுத் திறனாளிகள், முதியோர் பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டன. இவை மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் வாக்களிக்க வசதியாக இருந்தன. ஆனால் தேர்தல் முடிந்ததும் அவை அனைத்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

உரிய நடவடிக்கை...

இந்த சக்கர நாற்காலிகளை மாற்றுத் திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் இலவசமாக அரசு வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவிஇயக்குநர் குருராஜன் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையிடம் எத்தனை சக்கர நாற்காலி தேவை என்பதைக் கேட்டறிந்து அவர்களிடம் சக்கர நாற்காலிகள் ஒப்படைக்கப்படும். அவர்கள், தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இவற்றை வழங்குவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x