Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான - ஏல அறிவிக்கையை உடனே நிறுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை

டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுஎழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையில் உள்ள வடதெரு என்ற கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தொன்று தொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும் தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது. “சோழ நாடு சோறுடைத்து" என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளது. இத்தனை பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயிகளின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள்அரசு உறுதி பூண்டுள்ளது. நேற்றுமேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி, அப்பணிகளைத் துரிதப்படு்த்த அரசு ஆணையிட்டுள்ளது.

கடந்த 10-ம் தேதி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், காவிரிப் படுகைப் பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப்படுகை பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும். அதனால் இந்தப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழக அரசின் உறுதியான கொள்கையாகும்.

இக்காரணங்களை எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட ஏலத்தில் இருந்து வடதெரு பகுதியை நீக்க வேண்டும். எதிர்காலங்களில் தமிழகத்தின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது. மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது.

தமிழக விவசாயிகளின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் "கண்ணை இமை காப்பது போல" எங்கள் அரசு காக்கும்என்று உறுதிபடக் கூற விரும்பு கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.

டிடிவி தினகரன் கண்டனம்

அமமுக கழக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு நடந்து கொள்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதா்ல், இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x