Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

தமிழகத்தில் தமிழ் மொழி தழைக்கும் காலம் வரும் : பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சென்னை

தமிழகத்தில் தமிழ் மொழி தழைக்கும் காலம் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமக நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று இணையவழியில் நடைபெற்றது.

சமூக முன்னேற்ற சங்க பதிப்பகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், பாடகர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் நூலை வெளியிட, பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பாமக தலைவர்ஜி.கே.மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, இசை அறிஞர்கள் வைத்தியலிங்கம், செங்கல்வராயன், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் ச.சிவப்பிரகாசம், பொதுச் செயலர் ஏழுமலை, பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:

உலகின் ஆதி இசை

உலகின் ஆதி இசையான தமிழ் இசையை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் 2003-ல் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையும், 2005-ல் பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றமும் உருவாக்கப்பட்டன. அவற்றின் மூலம் தொடர்ந்து பொங்குதமிழ் பண்ணிசைப் பெருவிழாக்களை உலகம் முழுவதும் நடத்தி வருகிறோம்.

தமிழ் இசை கட்டாயப் பாடம்

குழந்தைப் பருவத்தில் இருந்தே தமிழ் இசையைப் படிக்க வேண்டும். அதற்காகத்தான் பள்ளிகளில் தமிழ் இசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், அந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை.

இசை விழாக்களில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் கலந்துகொண்டால்கூட, பிற மொழி பாடல்களைத்தான் பாடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

தமிழகத்தின் தெருக்களில் தமிழ் இருக்க வேண்டும். நிச்சயமாக தமிழகத்தில் தமிழ் மொழி தழைக்கும் காலம் வரும்.

இவ்வாறு விழாவில் ராமதாஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x