Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை

டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை பார்க்கும்போது, சமயத்துக்கு தகுந்தாற்போல் ஒரு நிலைப்பாட்டை திமுக எடுக்கிறதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது.

கடந்த 2020 மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு 3 ஆயிரம், உயிரிழப்புகள் 30 என்று இருந்த நிலையில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது.

அப்போது, எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் அவரவர் வீடு முன்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான தற்போதைய முதல்வரும் தம் வீட்டின் முன்பு கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜூன்11-ம் தேதி நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,759 ஆகவும், உயிரிழப்பு 378 ஆகவும் உள்ளது.

இந்த சூழலில் 27 மாவட்டங்களில் ஜூன் 14-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை செயல்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற முடிவு முறைதானா என்பதை முதல்வர் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை

ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘திமுக தனது தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல்விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், திமுக அரசு அமைந்த பிறகு, பெட்ரோல் விலை ரூ.4.28-ம், டீசல் விலை ரூ.4.28-ம் உயர்ந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் அல்லது ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x