Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

ரிசர்வ் வங்கி வழிமுறைகளை மீறி - அடாவடியாக கடன் வட்டி வசூலிக்கும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் : முற்போக்கு பெண்கள் கழகம் ஆட்சியரிடம் முறையீடு

ரிசர்வ் வங்கி வழிமுறைகளை மீறி கடன் வட்டி வசூலிக்கும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் பொதுச் செயலாளர் விஜயா தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விவரம்:

கரோனாவால் கடந்த ஓராண்டாக மக்கள் பாதிக்கப் பட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்களின் தலைவர்கள் இறந்துள்ளனர். தொடர் முடக்கத்தால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுமார் பத்தாயிரம் சுய உதவிக் குழுக்களில் 1.5 லட்சம் குடும்பங்கள் வங்கிகளில் சுமார்20 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளன. அத்துடன் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் வழங்கியுள்ள கடனுடன் இன்னும் கூடுதலாக கடன் பெற்று மீள முடியாத கடன் வலையில் சிக்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் என்ற பெயர்களில் சில தனிநபர்கள் அடியாட்கள் துணையுடன் 120% வட்டி வரை அன்றாடம் தொழில் புரியும் நபர்களிடம் குறிப்பாக பெண்களிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நுண்கடன் முகவர்கள் கடன்பட்டோரின் வீட்டு வாயிலில் நின்று அவர்களை அவமானம் செய்து வருகின்றனர். இதுபோன்ற அவமானம் பொறுக்க முடியாமல் அரியாங்குப்பம் சண்முகா நகரைச் சேர்ந்த ஞானவேல் மனைவி கன்னியம்மாள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்து தீவைத்துக் கொண்டுள்ளார். இதுபோன்ற கொடுமைகள் பல வீடுகளில் அரங்கேறி வருகின்றன.

அதனால் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் நுண்கடன், தனியார்கடன் உள்ளிட்ட அனைத்து வகைகடன்களையும் புதுச்சேரி அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி வழிமுறைகளை மீறி கடன் வட்டி வசூலிக்கும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். ஜாமீன்தாரர் கொண்டு ரூ.10 லட்சம் வரை கடன் தாராளமாக வழங்க வேண்டும். கந்துவட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற சட்ட விரோதமான கடன் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தை போன்ற வியாபார பகுதிகளில் அநியாய வட்டி வாங்குவோரை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சில தனிநபர்கள் அடியாட்கள் துணையுடன் 120% வட்டி வரை வசூலிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x