Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி

மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 6 சக்கரநாற்காலி மற்றும் 6 ஸ்ட்ரெச்சர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்தலைமை வகித்தார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவனிடம் ஐஓபி மண்டல மேலாளர் ராம் உபகரணங்களை வழங்கினார். அவற்றை அமைச்சர் மருத்துவமனை முதல்வர் டி.நேருவிடம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்ததொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் மூலம் இதுவரை 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டுள்ளன. அவை தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனா நோயாளிகள் பலர் உயிர்பிழைத்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெறுப்பேற்றது முதல் ஓய்வின்றி கரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். விரைந்த நடவடிக்கையின் மூலம் ஆக்சிஜன்தட்டுப்பாட்டை தீர்த்து வைத்துள்ளார். இன்று நாம் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மட்டும் 750 படுக்கைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அது 318 ஆக குறைந்துள்ளது. தொற்று பரவலும் குறைந்து வருகிறது. இனி வருங்காலங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் வகையில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன்வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, ஐஓபி தலைமை மேலாளர் ஹன்சராஜ், வங்கிப் பணியாளர்கள் சங்கத் தலைவர் ஆண்டனி தனபால், ஐஓபி மண்டல வள அலுவலர் அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x