Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

சென்னை ஓமந்தூரார் - பன்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றமா? : திட்டம் இருந்தால் அதைக் கைவிட ஓபிஎஸ் வேண்டுகோள்

ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையை கிண்டி கிங் வளாகத்துக்கு மாற்றும் திட்டம் இருந்தால் அதைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2011-ல் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள கட்டிடம் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை. மேலும்,அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கட்டிடம் இல்லை. இருவேறு கட்டிடங்களில் தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்று, சட்டப்பேரவையும், தலைமைச்செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடர்ந்து இயங்க வழிவகை செய்தார். அந்த இடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை உருவாக்கினார். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.

ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் இங்குள்ள பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். கரோனா காலகட்டத்தில் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் அனுமதிக்கப்பட்டு நல்ல சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பன்நோக்கு மருத்துவமனைக்கு ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டிடம் மீண்டும் சட்டப்பேரவையாகவோ, அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன. இது மிகவும் வருத்தமளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவரது மனங்களிலும் எழுந்துள்ளது.

எனவே ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது போன்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x