Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றும் - மருத்துவர், செவிலியருக்கு தரமான உணவு : சுகாதாரத் துறை தகவல்

சென்னை

தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இருப்பிட வசதியும், தரமான உணவும் சரியாக வழங்கப்படவில்லை என முதல்வருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து முதல்வரின் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்கள் தங்க உயர்தர தங்கும் விடுதிகளை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு நாளொன்றுக்கு சாதாரண உணவகங்களிலிருந்து உணவு வாங்க தலா ரூ.550 வரை செலவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதிக்குப் பிறகு சென்னையில் பல்வேறு உயர்தர சைவ, அசைவ உணவகங்களிலிருந்து தரம் உயர்ந்த உணவுகள் ரூ.450-க்கு வழங்கப்படுகிறது.

அதுபோல் தமிழ்நாடு முழுவதும் ரூ.375- ரூ.350 என மாவட்டத்துக்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தரமான உணவு மற்றும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் நாளொன்றுக்கு அரசுக்கு ஏற்படும் செலவினம் ஏறத்தாழ ரூ.30 லட்சம் மிச்சப்படுத்தப்படுகிறது. கரோனா பேரிடர் முடிவுக்குவரும் நிலையில் இது குறித்து துறை ரீதியாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x