Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

கடன் தவணையை செலுத்த வலியுறுத்தி - வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக நிதி நிறுவன ஊழியர்கள் மீது புகார் :

கோவில்பட்டியில் கடனுக்கான தவணைத் தொகையை கேட்டு, நிதி நிறுவன ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் தீப்பெட்டித் தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள்,சாலையோரம் கடை நடத்துபவர்கள் என பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடனுக்காக தவணைத் தொகையை கட்டமுடியாத நிலை உள்ளது. ஆனால், தனியார் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் தவணைத் தொகையை கேட்டு பொதுமக்களை தொடர்ந்துநெருக்கடிக்கு ஆளாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

கோவில்பட்டி காந்தி நகரைச்சேர்ந்த சித்ரா என்பவர் கஸ்தூரிமகளிர் சுயஉதவிக் குழு தலைவியாக உள்ளார். இந்தக் குழுவில் 21 பெண்கள் உறுப்பினராக உள்ளனர். நேற்று காலை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேர் சித்ரா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, நடு வீட்டில் அமர்ந்துள்ளனர். இதில்,ஒருவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு, வீட்டில் உள்ள யாரையும் வெளியே செல்லவிடாமல் தடுத்துள்ளார். பணத்தை கொடுத்தால் தான் அங்கிருந்து செல்வோம் என அவர்கள் சித்ராவையும், குழுவில் உள்ளவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு கூடியவுடன், நிதி நிறுவன ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதுகுறித்து, சித்ரா அளித்த புகாரின்பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் நிலையில் தனியார் நிதி நிறுவனத்தினர் கடன் தவணையை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். எனவே, அரசுஉடனடியாக தலையிட்டு, தவணைத் தொகை, வட்டி செலுத்தகட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்கள் மீதும், அவற்றின் ஊழியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x