Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

தமிழக கோயில்களுக்குச் சொந்தமான - 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே? : அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

தமிழக கோயில்களுக்குச் சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்தஇறைபணி ஆர்வலரான ஆ.ராதாகிருஷ்ணன்(42) என்பவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தற்போது 38 ஆயிரத்து 600 கோயில்கள் இந்து சமயஅறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 4,500கோயில்களில் மட்டுமே ஆண்டுவருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் உள்ளது. எஞ்சிய கோயில்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான திருத்தலங்களில் ஒருகால பூஜை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

பல ஏக்கர் நிலம் நன்கொடை

இதைக் கருத்தில் கொண்டே முந்தைய காலத்தில் பக்தர்கள் பலர், தங்களின் பல ஏக்கர் நிலங்களை கோயில்களுக்கு கொடையாகக் கொடுத்துள்ளனர். திருப்பூர்மாவட்டம் அவிநாசி பொன்னான்டாம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி கவுண்டர், தனக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தில் பாதியை திருப்பூர் மற்றும் கோவைமாவட்டத்தில் உள்ள அவிநாசியப்பர், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பல கோயில்களின் பூஜைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் எண்ணப்படி அவருடைய சொத்து வருவாய்கோயில்களுக்குச் செலவிடப்படவில்லை. அந்த நிலங்கள் எல்லாம் தற்போது வேறு நபர்களின் பெயர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குசூலூர் பத்திரப்பதிவு சார்-பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார்.

மேலும், தமிழக அரசு கடந்த 1985-86, 1986-87-ம் ஆண்டுகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் 2018–19, 2019–20-ம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம்இப்போது எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

கோவையில் ஆக்கிரமிப்பு

அதேபோல், கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோயில், விநாயகர் ஆலயம், கரிவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதத்தை கோயில்களுக்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘தமிழக அரசு கடந்த 1985 – 1987-ம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விவரக் குறிப்பேட்டில் உள்ள 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களின்விவரங்களையும், அதேபோல 2018 – 2020-ம் ஆண்டுகளில் வெளியிட்டுள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் சொத்து விவரப் பட்டியலையும் தனி அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மாயமான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு

மனுதாரரின் இந்தக் குற்றச்சாட்டு அதிர்ச்சிகரமானது. மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார்-பதிவாளர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், கோவை மாவட்ட நில அபகரிப்பு டிஎஸ்பி ஆகியோர் விரிவாகப் பதில் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சேலம் ஆ.ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறும்போது. ‘‘இறைபணியோடு, ஒலி மாசு இல்லாத தமிழகம்,குழந்தைகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்காகவும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதிட்டு பலவழக்குகளில் வெற்றியும் பெற்றுள்ளேன்.

கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறேன். ஆவணங்களின் அடிப்படையில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் இதைவிட அதிகமான கோயில் நிலங்கள் தமிழகத்தில் சூறையாடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசு, அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x