Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

தமிழக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை - சட்டப்பேரவை ஜூன் 21-ல் கூடுகிறது : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து பேசினார். அருகில் அமைச்சர் துரைமுருகன்.

சென்னை

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத் தொடர் மற்றும் கரோனாதடுப்புப் பணிகள் குறித்து ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஏப்ரலில் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த மே 7-ம் தேதிமுதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், கடந்தமே 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. அப்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தற்காலிகபேரவைத் தலைவர் முன்னிலையில் பதவியேற்றனர். 12 -ம் தேதிசட்டப்பேரவை தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டு, அன்றே பொறுப்பேற்றனர். அன்றுடன் பேரவைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

ஆளுநருடன் சந்திப்பு

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், முதல்வரின் செயலர் உதயசந்திரன், ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கரோனா தொற்று பரவலின்தற்போதைய நிலை, அரசுஎடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, இறப்பு தொடர்பான விவரங்களை ஆளுநரிடம் முதல்வர் விளக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் சட்டப்பேரவை கூட்டத் தொடரை கூட்டுவது குறித்தும் பேசப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்துமுதல்வரிடம் ஆளுநர் கேட்டறிந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை ஜூன் 21-ம் தேதி கூடுகிறது. அன்று காலை 10 மணிக்கு பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார். அதன்பின், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன பணிகளை எடுத்துக் கொள்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதற்கு, ஆளுநர் இசைவு அளித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடக்கும். பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு உறுப்பினர்கள் மட்டுமின்றி, பணியாற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ‘நெகட்டிவ்’ என வந்தவர்கள் மட்டுமே பேரவைக் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவர். பேரவை அரங்கில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆளுங்கட்சி, கூட்டணி கட்சிகள்,எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு ஜனநாயக முறையில் பேரவையை நடத்த வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம். அதன் அடிப்படையில்தான் பேரவைக் கூட்டம் நடக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

ஆளுநர் உரை முடிந்ததும், முழு பட்ஜெட் தாக்கல், மானிய கோரிக்கைகள் மீது விவாதம் தொடர்ந்து நடக்குமா?

இதுபற்றி அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். பேரவையில் ஆளுநர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச அனைத்து உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் உரையாற்றுவார்.

கடந்த முறை 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு அனுமதி உண்டா அல்லது கரோனா பரிசோதனை கட்டாயமா?

கரோனா பரிசோதனை அனைவருக்கும் கட்டாயமாக மேற்கொள்ளப்படும்.

கேள்வி நேரம் இடம் பெறுமா?

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது கேள்வி நேரம் இடம் பெற சாத்தியமில்லை. நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்படவில்லை. அதேபோல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு பின்புதான் அதிக அளவில் கேள்விகளை எழுப்புவர். தற்போது கரோனா தடுப்புப் பணிகள் நடந்து வருவதால் அதன்பிறகுதான் பதில்கள் பெறப்படும்.

பதில்கள் வந்தபின் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.

பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு வாய்ப்பு உண்டா?

அது பரிசீலனையில் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் வெளிநடப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அதுபோன்ற நிகழ்வுகள் இல்லாமல் சபை நடத்தப்படுமா?

முதல்வர் பதவியேற்று ஒரு மாதம் ஆகிறது. எந்த இடத்திலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். அதன் அடிப்படையில்தான் சட்டப்பேரவையிலும் நிகழ்வுகள் இருக்கும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

ஆளுநர் 2-வது முறையாக உரை

ஒரே ஆண்டில் பேரவையில் ஆளுநர் 2-வது முறையாக உரை நிகழ்த்துகிறார்.

முந்தைய 15-வது சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 2-ம்தேதி நடந்தது. இதில் ஆளுநர்உரையாற்றினார். பிப். 23-ம் தேதிஅப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது, 16-வது சட்டப்பேரவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மரபுப்படி ஆளுநர் உரையுடன் இந்தசட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x