Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

பேரிடர்களின்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க - வாட்ஸ்அப் எண், இணையதள வசதி அறிமுகம் : அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆபத்துகுறித்த தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மற்றும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்த எச்சரிக்கைத் தகவல்கள் ‘TNSMART’ செயலி மற்றும் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அச்சு,மின்னணு ஊடகங்கள் வாயிலாகபொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பேரிடர்கள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், படம் எடுத்து அனுப்பவும்வசதியாக பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென பிரத்யேகமாக ‘94458 69848’ என்ற வாட்ஸ்அப் எண் தொடங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு வரும் தகவல்கள், தொடர்புடைய அலுவலர்கள், துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் ‘மக்கள் களம்’ என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம்.

சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுபாட்டு மையம், தகவல்தொடர்பு மையமாக 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகிறது. பொதுமக்கள் ‘1070’ என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் இம்மையத்தை தொடர்பு கொண்டு பேரிடர் அபாயம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம். இதுமட்டுமின்றி, பொதுமக்கள் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் அனுப்ப ‘TNSMART’ செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

‘தாமினி’ செயலி

அதேபோல், இடி, மின்னல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்குடன், புனேவில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு, மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இடி, மின்னலின் தாக்கம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே பெறப்பட்டு, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வரு கிறது.

மேலும், ‘தாமினி’ செயலியை பயன்படுத்துபவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 40 கி.மீ. சுற்றளவில் இடி, மின்னலின் தாக்கம் குறித்து 45 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x