Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

தமிழகத்தில் கடந்த 2020 ஜனவரி முதல் நிகழ்ந்த - பிறப்பு, இறப்பு பதிவுக்கான கால தாமதக் கட்டணம் ரத்து : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் கடந்த 2020 ஜனவரி முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவுக்காக வசூலிக்கப்படும் கால தாமதக் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் குறைக்கவும், தொற்றைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி, தவிர்க்க முடியாத நேரங்களில் இறப்புகள் நிகழ்ந்து விடுகின்றன.

இந்த சம்பவங்களில் சில காரணங்களால் இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்துக்கு பிறகு,அதாவது 21 நாட்களுக்கு மேல்30 நாட்கள் வரை கால தாமதக்கட்டணம் ரூ.100 மற்றும் 30 நாட்களுக்குப் பிறகு ஓராண்டுக்குள் ரூ.200, அதற்கு மேல் ரூ.500 ஆகவும் உள்ளது.

பெருந்தொற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த கட்டண முறையானது சுமையை ஏற்படுத்திவருவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழக அரசே ஏற்கும்

இதன் அடிப்படையில், இந்தகட்டணத்தில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கவும், அந்த கால தாமதக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன்படி, இந்த கரோனா தொற்று காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், கிராமங்களில் கடந்த 2020-ம் ஆண்டு ஜன.1-ம்தேதி முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு குறித்த பதிவுகளில் கால தாமதக் கட்டணத்தை வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

கால தாமதக் கட்டண விலக்கால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசே ஈடுசெய்யும்.

இருப்பினும் உரிய காலத்தில் பிறப்பு, இறப்பை பதிவு செய்ய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x