Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்களில் - வளர்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை :

முதுமலையில் யானையின் தும்பிக்கையில் இருந்து சளி மாதிரியை சேகரிக்கும் மருத்துவக் குழுவினர். படம்: ஆர்.டி.சிவசங்கர்

பொள்ளாச்சி / முதுமலை

ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்களில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு நேற்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 28 யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். சமீபத்தில் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முடிவானது.

இதையடுத்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆனைமலை புலிகள் காப்பக கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஐ.அன்வர்தீனிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முகாம் யானை கலீம் மற்றும் நரசிம்மனுக்கு வனத்துறை அமைச்சர் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

வனப் பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த வண்ணத்தாய் குடும்பத்துக்கு ரூ.3.50 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார்.

யானைகளுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை குறித்து வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் கூறும்போது, ‘கரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவி உள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு குறைவு. மனிதர்களிடம் இருந்து குரங்குகளுக்கு பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது. யானைகளுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்படுகின்றன. தற்போது கோழிகமுத்தி முகாமில் உள்ள 22 யானைகள், வரகளியாறு முகாமில் உள்ள 6 யானைகளின் தும்பிக்கை, ஆசன வாயில் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலைய பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்படுகிறது. 3 தினங்களில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குநர் எஸ்.ஆரோக்கிய ராஜ் சேவியர், உதவி வனப் பாதுகாவலர்கள் பிரசாந்த், செல்வம், ஓய்வுபெற்ற வன கால்நடை மருத்துவத் துறைகூடுதல் இயக்குநர் எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதுமலையில் பரிசோதனை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவினர், யானைகளின் தும்பிக்கை மற்றும் ஆசனவாயில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர்.

முதுமலை காப்பக களஇயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, ‘‘முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பணிபுரியும் 52 பாகன்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. யானைகள் தனித்தனியாக பராமரிக்கப்படுகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x