Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

ஈரோடு மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் - கரோனா தடுப்பு நடவடிக்கைகளை 3 அமைச்சர்கள் ஆய்வு :

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் கட்டப்பட்டு வரும் கனி ஜவுளி மார்க்கெட் கட்டிடப் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை 3 அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன், கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், எம்பிக்கள் கணேசமூர்த்தி, சுப்பராயன், எஸ்.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் திருமகன் ஈவெரா, ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணி, காய்ச்சல் முகாம், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்டபகுதிகள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைள், அவர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள், நடமாடும் காய்கறி வாகனங்கள் இயக்கம் போன்றவை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் பேசும்போது, கரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு எடுக்கப்படும் சளி மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் தொற்றின் தன்மைக்கு ஏற்ப அவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர், என்றார்.

முன்னதாக, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில், அடிப்படை வசதிகள், சிகிச்சை முறைகள் ஆகியவை குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனிமார்க்கெட் ஜவுளி சந்தையினை ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x