Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

மாயமானதாக புகார் வந்தால் துன்புறுத்தக் கூடாது - ஓரினச் சேர்க்கையாளர்களை உடனே விடுவிக்க வேண்டும் : போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாயமான ஆணோ, பெண்ணோ ஓரினச் சேர்க்கையாளர் என தெரிந்தால் அவர்களை துன்புறுத்தாமல் அவர்கள் மீதான வழக்கை முடித்து அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கல்லூரிமாணவிகள் 2 பேர் நட்புடன் பழகிபின்னர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்துள்ளனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சென்னையில் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி இருந்தனர். அவர்களை காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், அவர்கள் மாயமானதாக மதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், தங்களுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கக் கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்தநீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,அந்த பெண்கள் மற்றும் பெற்றோருக்கு உளவியல் பெண் நிபுணர் மூலமாக கவுன்சலிங் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஓரினச்சேர்க்கையாளர்களின் மனநிலையை புரிந்து தீர்ப்பு வழங்க ஏதுவாக, அவரும் கவுன்சலிங்கில் பங்கேற்றார்.

இந்நிலையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

சட்டத்தின் முன்பு அனைவரும்சமமே. ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதுதொடர்பாக ஏற்கெனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆணோ, பெண்ணோ மாயமானதாக புகார் வந்து, அவர்ஓரினச் சேர்க்கையாளர் என தெரியவந்தால், போலீஸார் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டு,வழக்கை முடித்து, உடனே அவர்களை விடுவிக்க வேண்டும்.

ஓரினச் சேர்க்கையாளர்களை திறம்பட கையாளும் தொண்டு நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு 8 வாரங்களில் வெளியிட வேண்டும். அவர்களுக்கு தேவையான நிதியுதவி, சட்ட உதவிகளை மத்திய சமூகநீதித் துறை வழங்கவேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்குவதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் தங்குமிடங்களை 12 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பான கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்க வேண்டும். அச்செயலில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். பள்ளி,கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக கழிப்பறை அமைக்க வேண்டும். அவர்கள் தங்கள் கல்வி ஆவணங்களில் பெயர், பாலின மாற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் கொள்கைகளில் திருத்தம் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆகஸ்ட் 31-ம்தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x