Published : 07 Jun 2021 03:12 am

Updated : 07 Jun 2021 03:12 am

 

Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

புதுச்சேரியில் அமைச்சர்கள் பங்கீட்டில் - என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே35 நாட்களுக்கு பிறகு சுமுக உடன்பாடு : முக்கிய துறைகளை கைப்பற்றியது பாஜக

புதுச்சேரி

புதுச்சேரியில் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்து 35 நாட்களுக்கு பிறகு, அமைச்சரவை அமைப்பதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 14-ம் தேதி பதவியேற்கும் என கூறப்படுகிறது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். அவரைத் தவிர அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.


அமைச்சரவை பங்கீட்டில் இரு கட்சிகளிடையே முடிவு எட்டப்படாததால் இழுபறி நீடித்து வந்தது. துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்தை ரங்கசாமி ஏற்கவில்லை. பேரவைத் தலைவர் பதவி யாருக்குஎன்பதிலும் போட்டி நிலவியது.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீட்டிலும் சில நாட்கள் தனிமையில் இருந்தார். இந்நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸுடன் பாஜக தொடர்ந்து பேசி வந்தது.

இதில், பாஜகவுக்கு 2 அமைச்சர்களும் பேரவைத் தலைவர் பதவியும் தர ரங்கசாமி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், பேரவைத் தலைவர் பதவியை யாருக்கு வழங்குவது என பாஜக தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவியும், நியமன எம்எல்ஏ ஒருவருக்கு பேரவைத் தலைவர் பதவியும் வழங்க முடிவு செய்தனர்.

பாஜக மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்பி, கடந்த வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு வந்து ரங்கசாமியை சந்தித்தார். அப்போது பாஜக தரப்பில் பேரவைத் தலைவர், அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். நியமன எம்எல்ஏவுக்கு பேரவைத் தலைவர் பதவி தர ரங்கசாமி மறுப்பு தெரிவித்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரைத்தான் பேரவைத் தலைவராக பரிந்துரை செய்வேன் என்றார். அத்துடன் அமைச்சர்களுக்கு துறைகளை தானே ஒதுக்கீடு செய்வதாகவும் ரங்கசாமி கூறினார்.

இதனால் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை ராஜீவ் சந்திரசேகர் மீண்டும் சந்தித்துப் பேசினார். இதில் இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டது.

பேரவைத் தலைவர்

இதுபற்றி பாஜக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பாஜக தரப்பில் பேரவைத் தலைவர் பதவியை செல்வத்துக்கு வழங்க முன்பு முடிவு செய்யப்பட்டது. அவர்தயங்கியதால் நியமன எம்எல்ஏஒருவருக்கு தர முடிவு எடுக்கப்பட்டது. நியமன எம்எல்ஏவுக்கு பேரவைத் தலைவர் பதவி தர, பாஜக தரப்பில் மட்டுமின்றி முதல்வரும் விரும்பவில்லை. அந்த நியமன எம்எல்ஏவுக்கு தற்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் செல்வத்துக்கே பேரவைத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. இறுதி செய்யப்பட்ட பட்டியலை முதல்வரிடம் எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அளித்தார். முதல்வரும் அதை ஏற்றுக் கொண்டார்’’ என்றனர்.

பாஜக கொடுத்த பட்டியலில் பேரவைத் தலைவர் பதவிக்கு செல்வம், அமைச்சர்கள் பதவிக்கு நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக என்ஆர் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

பாஜக கோரிய துணை முதல்வர் என்ற பதவி புதுச்சேரியில் கிடையாது. எனவே, அந்த பதவியை புதிதாக உருவாக்க வேண்டாம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். அதை பாஜக தரப்பில் ஏற்றனர். அதனால் முக்கிய துறைகளை பாஜகவுக்கு வழங்க ரங்கசாமி ஒப்புக்கொண்டார். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அமைச்சர்கள் யார் என்பதை முதல்வர் ரங்கசாமி விரைவில் முடிவு செய்து ஆளுநரிடம் பட்டியலை தருவார்.

வளர்பிறையில் பதவியேற்பு

அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் அமைச்சரவை பதவியேற்பு விழாவை நடத்த ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். அநேகமாக வரும் 14-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என தெரிகிறது. பேரவைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். தேர்வுசெய்யப்படும் பேரவைத் தலைவரும் அதே நாளில் பதவியேற்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x