Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை - வண்டலூர் பூங்காவில் முதல்வர் ஆய்வு : தொற்றுக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. முதல் அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கரோனா வைரஸ் 2-வது அலை பரவி வருகிறது. இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் ஹைதராபாத், ஜெய்ப்பூர், உத்தர பிரதேச மாநிலம் இட்டாவாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்கள் சிலவற்றுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல மாநிலங்களில் கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டன.

அதன்படி, சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா கடந்த ஏப்ரல் 20-ம் தேதி மூடப்பட்டது. பார்வையாளர்கள் யாரும்அனுமதிக்கப்படாத நிலையில்,பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையே, பூங்காவில் சிங்க உலாவிட இருப்பிடத்தில் இருந்த 5 சிங்கங்கள் கடந்த மே 26-ம் தேதிசரியாக உணவு உண்ணவில்லை. அவற்றுக்கு தொடர் இருமல் இருந்ததால் உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவர் குழுவை அனுப்பிவைத்தது. அந்தக் குழு பூங்காவில் உள்ள 11 சிங்கங்களின் ரத்தமாதிரிகளை சேகரித்து, தமிழ்நாடுகால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியது. மேலும், சிங்கங்களின் மூக்கு மற்றும் மலவாயில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆய்வக நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஆய்வக அறிக்கை கடந்த 4-ம் தேதி வந்தது. அதில், 9 சிங்கங்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆய்வக அறிக்கை வருவதற்கு முன்பே, 3-ம் தேதி மாலை பூங்காவின் 2-வது சிங்க உலாவிட இருப்பிடத்தில் இருந்த நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. அதற்கும் வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தொற்றால் பாதிக்கப்பட்ட 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, சிசிடிவி கேமரா வழியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு உயிரியல் பூங்காக்கள் ஆணையதலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின், வண்டலூர் பூங்காவுக்கு நேற்று சென்று ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் பேட்டரி வானகத்தில் சென்று, தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், பூங்காவில் கடைபிடிக்கப்பட்டு வரும் கரோனா பரவல் தடுப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு உயர்தரசிகிச்சை வழங்குமாறு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், பூங்காவில் விலங்குகளை பராமரிக்கும் காப்பாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

அதிகாரிகள் விளக்கம்

ஆய்வின்போது, சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து முதல்வரிடம் பூங்கா அதிகாரிகள் விளக்கினர். அவர்கள் கூறியதாவது:

தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், அனைத்து சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சிறப்பு மருத்துவர் குழு மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்டவை சிங்கங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சிங்கங்களுக்கு தொற்று எப்படி பரவியிருக்கும் என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 சிங்கங்கள் மற்றும்4 புலிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ளபாலூட்டி வகை விலங்குகளின்மாதிரிகளும் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன.

ஹைதராபாத்தில் உள்ள உயிரின செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில், சிங்கங்களை தாக்கிய கரோனா வைரஸ்கள் எத்தகைய உருமாற்றம் அடைந்தன என மரபணு ரீதியாக ஆய்வுமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொற்று பரவியதற்கான காரணங்களை அறியலாம்.

இவ்வாறு முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு, வனத் துறை தலைவர் எஸ்.யுவராஜ், தலைமை வன உயிரினக் காப்பாளர் எஸ்.எம்.அப்பாஸ், சிறப்பு செயலர் சேகர் குமார் நீரஜ், வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் தேபசிஸ் ஜானா, துணை இயக்குநர் நாகசதீஷ், பூங்கா கால்நடை மருத்துவர் தர், ஜி.செல்வம் எம்.பி., வரலட்சுமி எல்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x