Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு - சான்றிதழில் ‘கரோனா உயிரிழப்பு’ என குறிப்பிட்டு வழங்க வலியுறுத்தல் :

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனைகளுக்கு சிகிச்சைக்கு செல்பவர்கள் உயிரிழக்கும் போது, சிலருக்கு மட்டுமே, ‘கரோனா உயிரிழப்பு’ என மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், பலருக்கு உயிரிழப்புக்கு வேறு காரணங்கள் குறிப்பிட்டு வழங்கப்படுவதாகவும் சர்ச்சை நீடித்து வருகிறது.

இந்நிலையில், கரோனா வார்டில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுவோரில் உயிரிழக்கும் அனைவருக்கும் ‘கரோனா உயிரிழப்பு’ என குறிப்பிட்டு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ் தேசிய பேரியக்க தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் கூறியதாவது:

கரோனா தொற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தான் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளின் கரோனா வார்டுகளில் சேர்க்கின்றனர். இவ்வாறு சேர்க்கப்படுபவர்களில் யாரேனும் உயிரிழந்தால் அது கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு தான். ஆனால், ஏதேதோ காரணங்களுக்காக இந்த உயிரிழப்பு விவரங்கள் மாற்றி பதிவு செய்யப்படுகிறது.

சிலருக்கு மட்டுமே காரோனா உயிரிழப்பு என்று மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடுகின்றனர். பலருக்கு, மூளைச் சாவு, இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல் என்பது போன்ற விதவிதமான காரணங்களை பதிவு செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்குகின்றனர்.அரசு மருத்துவமனை அல்லாத இடங்களில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளுடன் வந்து அரசு மருத்துவமனை கரோனா வார்டுகளில் சிகிச்சைக்கு சேருவோர் உயிரிழந்தால் இவ்வாறு தான் சான்றிதழ் தரப்படுகிறது.

கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழில் அரசும், மருத்துவத் துறையும் அறம் தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சான்றிதழ்கள் அந்த குடும்பங்களுக்கு பின்னாளில் அரசு உதவிகளுக்கு தகுதி ஏற்படுத்தலாம், இல்லாமலும் கூட போகலாம். எனவே, இதுதொடர்பாக அரசும், சுகாதாரத் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து உரிய சான்றிதழ் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x