Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் - 30,000 செம்மறி ஆடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 செம்மறி ஆடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போடும் பணியை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செம்மறி ஆடுகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அம்மை நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி ஆறுமுகநேரியில் நேற்று நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், செம்மறி ஆடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சம்பத், துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மழைக்காலங்களில் செம்மறி ஆடுகளை தாக்கும் ஆட்டம்மை நோயில் இருந்து ஆடுகளை பாதுகாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் செம்மறி ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆட்டம்மை தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

கால்நடைகளுக்கு எந்தெந்த பகுதிகளில் எந்த மாதிரியான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது என்பதை கால்நடை பராமரிப்புத் துறை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப தடுப்பூசிகள் உரிய காலத்தில் போடப்படுகின்றன. ராணிப்பேட்டையில் உள்ள மருந்தகத்தில் தேவையான மருந்துகள் தயாரிக்கப்பட்டு தேவைப்படும் இடங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x