Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

தகவல் தொழில்நுட்ப புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் விவகாரம் - ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் :

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதிநோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சகம் ஏற்கெனவே அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தபடி புதிய விதிமுறைகளை உங்கள்நிறுவனத்தில் (ட்விட்டர்) அமல்படுத்துவது தொடர்பாக எவ்வித பதிலோ, விளக்கமோ வரவில்லை. புதிய விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்துவது குறித்து எவ்வித தகவலும் வரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் தலைமை புகார் அதிகாரி நியமனம் தொடர்பாகவோ, அத்தகைய அதிகாரி நியமிக்கப்பட்டது தொடர்பான தகவலோ இதுவரை ட்விட்டர் நிறுவனத்திடமிருந்து வரவில்லை.

மத்திய அரசின் உத்தரவின்படி புகார் பெறும் அதிகாரி மற்றும் நிறுவன ஊழியரில் ஒருவரை தொடர்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

நல்லெண்ண அடிப்படையில் ட்விட்டர் நிறுவனம் உடனடியாக விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என அரசு விரும்புகிறது. மேலும் விதிமுறைகளை பின்பற்றத் தவறும்பட்சத்தில் புதிய சட்டத்தின்படி சட்ட ரீதியாக அபராதம் விதிக்கப்படும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஊடகங்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும், வேறு வழியில்லை என கடந்த புதன்கிழமை டெல்லிஉயர் நீதிமன்றம் சமூக வலைதளங்கள் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசுஇறுதி நோட்டீஸை ட்விட்டருக்குஅனுப்பியுள்ளது குறிப்பிடத் தக்கது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபதிலில், ட்விட்டர் நிறுவனம் தாங்கள் அரசு உத்தரவை ஏற்று குறைகேட்பு அதிகாரியை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் சரியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸ் அமைந்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறையின்படி சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் குறை கேட்பு அதிகாரியை நியமித்து, பயனாளி களிடமிருந்து வரும் புகாரை விசாரித்து 36 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். இதற்காக தலைமை குறைகேட்பு அதிகாரி மற்றும் உள்ளுறை தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x