Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

மத்திய சுகாதாரத் துறை தேவையான நிதியை ஒதுக்கி - மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 2015-ம் ஆண்டுதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில்மருத்துவமனை அமைக்க அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

2019-ம் ஆண்டில் அடிக்கல்

தொடர்ந்து, கடந்த 2019-ல் மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டது. உடனடியாக அந்த நிலத்தை சுற்றி 5.5 கிமீ நீளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து,மருத்துவமனை செல்வதற்கான சாலையும் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் தங்களால் நாட்டப்பட்டது. மிக பெருமைமிக்க அந்த எய்ம்ஸ் நிறுவனத்துக்கான நிலம் மாநில அரசால் மத்திய அரசுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், சுற்றுச்சுவரைத் தவிர அந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கான எவ்வித பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.

தென் மாவட்டங்கள் பயன்பெறும்

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநில மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்கு இந்தநிறுவனத்தை விரைவாக அமைப்பது மிகவும் அவசியமாகும். மத்தியஅரசு இந்த நிறுவனத்துக்கு ஒரு தலைவர், ஒரு செயல் இயக்குநர் மற்றும் சில குழுக்களை அமைத்துள்ளது. இருந்தாலும் இந்த பெரியஅளவிலான திட்டத்தை செயல்படுத்த அந்த குழுக்களுக்கு தெளிவான அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது.

அதேநேரம், தாமதத்தை தவிர்க்க, வேறு இடத்தில் தற்காலிகமாக இந்த நிறுவனத்தை தொடங்க பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இத்திட்டம் மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாகக் கருதுகிறோம்.

எனவே, அர்ப்பணிப்பு உணர்வுள்ள அதிகாரிகள் குழு மற்றும் அவர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், திட்டத்துக்குதேவையான நிதி ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மூலம் வழங்குவதுடன், கட்டுமானப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண் டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x