Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

பாவலர் அறிவுமதிக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் ‘கவிக்கோ விருது’ : தமிழியக்கம் நிறுவனர் கோ.விசுவநாதன் வழங்கினார்

வேலூர்

கவிக்கோ அப்துல்ரகுமான் அறக்கட்டளை மற்றும் தமிழியக்கம் இணைந்து ‘கவிக்கோ விருது விழா’ காணொலி கூட்டமாக நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு, கவிக்கோ அறக்கட்டளை பொருளாளர் சோலைநாதன் தலைமை தாங்கினார். பதிப்பாளர் எஸ்.எஸ்.ஷாஜஹான் வரவேற்றார். ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் 2019-ம் ஆண்டுக்கான ‘கவிக்கோ விருது’ பாவலர் அறிவுமதிக்கு வழங்கப்படுவதாக கவிக்கோ அறக்கட்டளைச் செயலாளர் அயாஸ் பாஷா அறிவித்தார்.

தொடர்ந்து, தமிழியக்கம் மாநில செயலாளர் சுகுமார், பொருளாளர் புலவர் வே.பதுமனார், மூத்த இதழாளர் ஜே.வி.நாதன், பொதுச்செயலாளர் கவியருவி அப்துல்காதர், திரைப்பட இயக்குநர்கள் லிங்குசாமி, பிருந்தா சாரதி, கவிஞர்பழநிபாரதி, கவிஞர் இசாக், கவிக்கோ அப்துல்ரகுமானின் மகன் மருத்துவர் சையத் அஷ்ரப்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் நை.மு.இக்பால் பாராட்டுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், விஐடி வேந்தரும் தமிழியக்கம் நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் பொற்கிழி அளித்து விருது வழங்கினார்.

அவர் பேசும்போது, ‘‘நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வாழ்நாள் முழுவதும் படம் பிடித்து காட்டியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். இந்நிகழ்ச்சியின் மூலம் பாவலர் அறிவுமதி கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு போராளி என்பதையும் தெரிந்துகொண்டேன்.

அவருக்கு விருது வழங்குவதில் பெருமைப்படுகிறேன். அவர் பலவற்றையும் தமிழுக்கும் தமிழ் உலகத்துக்கும் செய்ய வேண்டும். அவரை தமிழியக்கத்துக்கு தேவைப்படும்போது அழைக்கிறேன். அவர் தமிழுக்கு துணையாக இருக்க வேண்டும். தமிழியக்கம் அரசாங்கத்துடன் இணைந்து கவிக்கோவின் கருத்துகளை தமிழ் சமுதாயத்திடம் கொண்டுபோய் சேர்க்க பாடுபடும்’’ என்றார். விருது பெற்ற பாவலர் அறிவுமதி ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியாக கவிஞர் அன்பு நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x