Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் : ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் மருத்துவக் கழிவுகள், கரோனா பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதை சமூக விரோதிகள் எரித்துவிடுகின்றனர். இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது.அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்று பரவும் இதுபோன்ற காலகட்டங்களில் உயிரி மருத்துவக் கழிவுகளை எப்படி கையாள வேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரையின்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் நகராட்சி ஆகியவற்றின் ஆணையர்கள் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து ஆவடி மாநகராட்சி ஆணையர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரையும் கூடுதலாக எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளது.

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய மற்றும்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களைச் சேர்ந்த இரு அதிகாரிகளைக் கொண்டு வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு நேரில் ஆய்வு செய்து, அது தொடர்பாக ஆய்வறிக்கையை, வழக்கு மீதான அடுத்த விசாரணை நாளான,ஜூன் 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x