Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

கடலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் - கரோனா தகவல் இணையதளம் திறப்பு : வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்திற்கான கரோனா சார்ந்த தகவல் இணையத்தளத்தை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்.

இந்த இணையத்தளத்தின் மூலம் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் விவரம், தடுப்பூசி குறித்த விவரங்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவற்றை சிரமமமின்றி எளிதில் அறிந்து கொள்ள முடியும். ‘https:// covidcarecuddaore.in’ என்ற இந்த இணையத்தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது குறித்து வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:

கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும்,தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று பாதித்தவர்கள் கரோனா பராமரிப்பு மையத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

தனியார் மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து, நாள்தோறும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மருத்துவர்களின் ஒப்புதல் சீட்டுகளின்றி மருந்தகங்களில் மருந்துகளை வழங்க கூடாது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து சிப்காட் தொழில் நிறுவனங்களின் சார்பில் அளிக்கப்பட்ட 113 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10 டி டைப் ஆக்சிஜன்சிலிண்டர்கள் மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வேளாண் அமைச்சர் சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், திட்ட இயக்குநர் ( ஊரக வளர்ச்சி) மகேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மருத்தவர்.செந்தில்குமார் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x