Published : 04 Jun 2021 03:13 am

Updated : 04 Jun 2021 03:13 am

 

Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

தலைவர்களுக்கெல்லாம் தலைவர் - முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் கருணாநிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை

‘‘தலைவர்களுக்கெல்லாம் தலைவர், முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் கருணாநிதி’’ என்றுதிமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

‘தலைநிமிர்ந்து வருகிறேன்’


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் நேற்றுவெளியிட்ட காணொலி பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:

திருவாரூரில் கருவாகி, தமிழகத்தையே தனதூராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர், முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள்ஜூன் 3. கோடிக்கணக்கான திமுகதொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நாள் இது. அதனால்தான் திமுக தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனிப் பிறந்தநாள்கள் இல்லை. எல்லோருக்கும் பிறந்தநாள் இந்த ஜூன் 3.

கருணாநிதிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன். ஈரோட்டில் அன்றொரு நாள் நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை தொண்டர்களின் துணையோடு நிறைவேற்றிக் காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல வருகிறேன்.

தலைவருக்குக் கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன். கருணாநிதி மறையவில்லை. மறைந்து இருந்து என்னைக் கவனிப்பதாகத்தான் எப்போதும் நினைப்பேன்.

அறிவுரைப்படி செயல்படுகிறேன்

ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே கரோனாவை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று என்னை கருணாநிதி உருவகப்படுத்தினார். அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

‘யாரிடம் இருந்து பாராட்டு வரவில்லையோ அவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்' என்று அன்றொருநாள் விழுப்புரத்தில் கருணாநிதி எனக்குச் சொன்னார். தேர்தலில் நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பலரது பாராட்டையும் திமுகவுக்கு வாங்கித் தரும் வகையில் இப்போது செயல்பட்டு வருகிறேன்.

வாழ்த்து சொல்வீர்களா தலைவரே!

செயல்படுகிறேன் என்றால் தனிப்பட்ட நானல்ல, என்னுள் இருந்து கருணாநிதிதான் செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது சொல். எனக்கு சாசனம். அவரது வாழ்க்கை எனக்குப் பாடம். அவரது பாராட்டே எனக்கு உயிர்விசை. அவரது குரலே எனக்கு தேனிசை.

கருணாநிதியின் வார்ப்பான நான், இந்த ஜூன் 3-ல் வெற்றிச் செய்தியோடு வருகிறேன். ‘வாழ்த்துகள் ஸ்டாலின்' என்று சொல்வீர்களா தலைவரே!

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x