Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

98-வது பிறந்தநாள் கொண்டாட்டம் - கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை : ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திமுக தொண்டர்கள் உதவி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும்அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழக முதல்வராக 19 ஆண்டுகளும், திமுக தலைவராக 50 ஆண்டுகளும் இருந்த, மறைந்த கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கருணாநிதியின் பிறந்தநாளை மிக எளிமையாக, தங்கள்இல்லங்களிலேயே கொண்டாடுமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் இல்லங்களில் கருணாநிதியின் உருவப்படத்தை மலர்களால் அலங்கரித்து பிறந்தநாளைக் கொண்டாடினார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், உணவு உள்ளிட்டவற்றையும் வழங்கினர்.

மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு.முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இளைஞரணிச் செயலாளர்உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கருணாநிதி நினைவிடத்தில் மரக்கன்று ஒன்றையும் ஸ்டாலின் நட்டார். அண்ணாவின் நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர், கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர், அங்குள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அங்கிருந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் அங்குள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக அலுவலக செயலாளர்பூச்சி முருகன், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோபாலபுரம் இல்லம்

அதைத் தொடர்ந்து கருணாநிதி வசித்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி வணங்கினார். பின்னர் சி.ஐ.டி. காலனியில் உள்ள கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி வணங்கினார். அப்போதுராசாத்தி அம்மாள், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்உடனிருந்தனர். இல்லம் அருகேமாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கரவாகனம், ஸ்மார்ட் போன் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின்வழங்கினார்.

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை யும், அவருடனான தங்களின் அனுபவங்களையும் நினைவு கூர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x