Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

காவிரி டெல்டா பாசனத்துக்காக - மேட்டூர் அணையில் இருந்துஜூன் 12 முதல் தண்ணீர் திறப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறை செயலர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில், அணையின் தற்போதைய நீர்மட்டம், டெல்டா பாசன விவசாயிகளின் தேவை ஆகியவை குறித்துவிவாதிக்கப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

ஜூன் 3-ம் தேதி (நேற்று) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என்றுமுதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில், விவசாயிகளை கலந்துபேசி தூர்வாரும் பணிகள் இந்த ஆண்டு முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடியில் 547 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன்மூலம் அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீரை கொண்டு சேர்க்க இயலும்.

இந்த ஆண்டு விவசாயப் பணிகளுக்கு தேவையான விதைநெல், உரங்கள், பூச்சி மருந்து, இதரவேளாண் இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x