Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

இஎஸ்ஐ, குழந்தைகள் மருத்துவமனைக்கு தமிழக சிறப்பு காவல் படையினர் உதவி :

சென்னை

இஎஸ்ஐ மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தமிழக சிறப்பு காவல் படையினர் வழங்கினர்.

கரோனாவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்போருக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் www.letsfightcorona.com என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். கரோனா மற்றும் பொதுமுடக்கத்தால் வருமானமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் இந்த இணையதளம் மூலம் தாங்கள் கொடுக்க விரும்பும் பொருட்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கலாம்.

அவ்வாறு கொடுக்க விரும்பும் பொருட்களை சிறப்பு காவல் படையினர் பெற்று தேவையான நபர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், உதவி தேவைப்படுபவர்களும் இந்த இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கும் சிறப்பு காவல் படையினர் உதவி செய்து வருகின்றனர்.

அதன்படி தனியார் நிறுவன அதிகாரிகள் துரை, விஜயக்குமார் ஆகியோர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உட்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சிறப்பு காவல் படையினரிடம் கொடுத்தனர். அவற்றை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறப்பு காவல் படையினர் வழங்கினர்.

நேற்று தனியார் நிறுவன அதிகாரிகள் ஷியாம், பிரகாஷ் ஆகியோர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சானிடைசர், முகக்கசவம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் ஆகியவற்றை சிறப்பு காவல் படையினரிடம் கொடுத்தனர்.

இவை அனைத்தும் அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை, வியாசர்பாடியில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த்முரளி மற்றும் அதிகாரிகள் இந்த பொருட்களை கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x