Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

இந்தியாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸுக்கு புதிய பெயர்கள் : கப்பா, டெல்டா என பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கண்டறியப்பட்ட உரு மாறிய கரோனா வைரஸ்களுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது. கடந்த ஆண்டு மத்தியில் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் மரபணு மாறி புதிய வகை வைரஸாக பரவுவது தெரியவந் தது. இத்தகைய உருமாறிய கரோனா வைரஸை அடையாளப்படுத்த உலக சுகாதார அமைப்பு கிரேக்க எண் கணித அடிப்படையில் புதிய பெயர்களை சூட்டி வருகிறது.

உருமாறிய கரோனா வைரஸ் முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக் கப்பட்டது. அறிவியல்ரீதியாக அதற்கு B.1.1.7. என்று பெயரிடப்பட்டது. எனினும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக அந்த வைரஸுக்கு 'ஆல்பா' என்று உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியது.

இதன்பிறகு தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட B.1.351. என்ற வைர ஸுக்கு 'பீட்டா' என்றும் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கரோனா வைரஸுக்கு 'காமா' என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இந்த வரிசையில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.1 என்ற உருமாறிய கரோனா வைரஸுக்கு 'கப்பா' என்றும், B1.617.2 என்ற உருமாறிய கரோனா வைரஸுக்கு 'டெல்டா' என்றும் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியிருக்கிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

உருமாறிய கரோனா வைரஸ்கள் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றன. எனவே கரோனாவின் மரபணு மாற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. உருமாறிய கரோனா வைரஸ்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள கிரேக்க எண் கணித அடிப்படையில் பெயர் சூட்டி வருகிறோம்.

இந்தியாவில் B.1.617.2 என்ற உரு மாறிய கரோனா வைரஸ் (டெல்டா) கடந்த 2020 அக்டோபரில் முதல்முறை யாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந் தியாவில் வேகமாகப் பரவியது.

இதேபோல இந்தியாவில் B.1.617.1 என்ற உருமாறிய கரோனா வைரஸ் (கப்பா) கடந்த ஆண்டு அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்த ஏப்ரலில் அந்த நாட்டில் வேகமாகப் பரவியது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிரேக்க எண்கள் ஏன்?

கடந்த 1918-ம் ஆண்டில் ஐரோப்பாவில் புதிய வகை வைரஸ் பரவியது. அந்த வைரஸ் எந்த நாட்டில் தோன்றியது என்பது தெரியவில்லை. எனினும் ஸ்பெயினில் பாதிப்பு அதிக மாக இருந்ததால் அதற்கு ஸ்பானிஷ் புளு என்று பெயரிடப்பட்டது. கடந்த 1976-ல் பரவிய புதிய வகை வைரஸுக்கு காங்கோ நாட்டின் நதியான எபோலா வின் பெயர் சூட்டப்பட்டது.

கரோனா வைரஸ் தற்போது உரு மாறி பல்வேறு நாடுகளில் பரவி வரு கிறது. எனவே இடத்தின் அடிப்படையில் பெயரிடாமல் பொதுவான பெயரை சூட்ட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் உரு மாறிய கரோனா வைரஸ்களுக்கு கிரேக்க எண்களின் அடிப்படையில் பெயர்களை சூட்டி வருகிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பரவும் உருமாறிய கரோனா வைரஸ்களை, இந்திய கரோனா வைரஸ் என்று அழைக்கக் கூடாது என்று கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x