Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

தமிழகத்தில் 3 வாரத்துக்கு முன்பு இருந்த - நெருக்கடியான சூழல் தற்போது இல்லை : நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத் துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன். உடன் அமைச்சர் பி.மூர்த்தி, கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் ச.விசாகன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

தமிழகத்தில் 3 வாரங்களுக்கு முன்பு இருந்த நெருக்கடியான சூழல் தற்போது இல்லை என நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 3 வாரங்களுக்கு முன்பு இருந்த நெருக்கடியான சூழல் தற்போது இல்லை. நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் ஒரு நேரத்தில் படுக்கை வசதிகள் இல்லை, ஐசியு படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லா வகையிலும் பிரச்சினை இருந்தது. முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நான் மட்டுமன்றி அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் குறுகிய காலத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றினால் இன்னும் விரைவில் 2-வது அலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சமீபத்தில் அதிகக் கட்டணம்வசூலித்த தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்றவருக்கு ரூ.64,000 திரும்பத் தரப்பட்டுள்ளது. இந்தத் தவறு மறுபடியும் நிகழாத வகையில் தனியார் மருத்துவமனைகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கண்காணிப்பாளர்களையும் நியமித்துள்ளோம்.

அமெரிக்காவில் 8 கோடி தடுப்பு ஊசிகள் கூடுதலாக வைத்துள்ளனர். அதனை தமிழகத்துக்குக் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி, செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே தடுப்பூசி உற்பத்தியில் இறங்கலாம் என்ற ஏற்பாடும் இருக்கிறது. தொலைநோக்குப் பார்வையோடு இதை அணுகி தொழிலதிபர்கள் சிஎஸ்ஆர் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை இங்கிருந்தே மேற்கொள்ளும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x