Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

மத்திய அரசு பணிக்கு அனுப்ப மறுத்து மோடிக்கு கடிதம் அனுப்பிய பின் புதிய திருப்பம் - மேற்குவங்க மாநில தலைமை செயலர் பணி ஓய்வு : முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக பணி நீட்டிப்பு

யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க கடந்த வாரம் பிரதமர் மோடி மேற்கு வங்கம் வந்தார். ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை தோற்கடித்தவருமான சுவேந்து அதிகாரியும் அழைக்கப்பட் டிருந்தார். இது மம்தாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கு மம்தா அரை மணி நேரம் தாமதமாக வந்தார். இதனால், அவர்களுக்காக பிரதமர் மோடி காத்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மேற்குவங்க தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாயாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அவருக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி கடந்த 24-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை தலைமை செயலர் பணியில் இருந்து அலபன் பந்தோபாத்யாயாவை விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு பணிக்கு அவரை திரும்ப அழைத்தும் மாநில அரசுக்கு மத்திய பணியாளர் பயிற்சித் துறை கடிதம் எழுதியது. இதற்கு மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி நேற்று எழுதிய கடிதத்தில், ‘‘மாநில அரசின் தலைமைச் செயலாளரை மத்திய அரசு பணிக்கு திரும்ப அழைக்கும் ஒருதலைபட்சமான உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது. இது மேற்கு வங்க மாநிலத்தின் நலன்களுக்கு எதிரானது. கரோனா தடுப்பு மற்றும் யாஸ் புயல் நிவாரணப் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தப் பணிகள் நடக்கும்போது பாதியில் அவரை பணியில் இருந்து விடுவிக்க முடியாது. தலைமைச் செயலாளருக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி கடந்த 24-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், 4 நாட்களில் ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு இடையில் என்ன நடந்தது என்று புரியவில்லை. தலைமை செயலரை திரும்ப அழைக்கும் உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் நேற்று புதிய திருப்பம் ஏற்பட்டது. மேற்கு வங்க அரசின் தலைமை செயலாளர் பதவியில் இருந்து அலபன் பந்தோபாத்யாயா நேற்றுஓய்வு பெற்றார். அதேநேரம், முதல்வர் மம்தாவின் தலைமைஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார். இதை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தலைமை செயலாளர் பதவியில் இருந்து அலபன் பந்தோபாத்யாயா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைமை செயலராக எச்.கே.திவிவேதி நியமிக்கப் பட்டுள்ளதாக மம்தா தெரிவித் துள்ளார். தலைமை செயலரை திரும்ப அழைக்கும் காரணத்தை மத்திய அரசு தெரிவிக்காததால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அலபன் பந்தோபாத்யாயாவின் சேவை மாநிலத்துக்கு தேவை என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் மம்தா தெரிவித்துள்ளார். மத்தியஅரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே நிர்வாக ரீதியாக நடக்கும் இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x