Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

புகைப் பழக்கத்தை கைவிட விரும்புவோருக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் : பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வேண்டுகோள்

புகைப் பழக்கத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

உலக புகையிலை ஒழிப்பு நாளான மே 31-ம் தேதியை முன்னிட்டு, ‘புகையிலைப் பொருட்கள் மற்றும் புகைபிடித்தல் பழக்கத்தை கைவிட உறுதியெடுங்கள்’ (Commit to Quit) என்ற முழக்கத்தை உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு முன்வைத்துள்ளது.

புகையிலை பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் உலக அளவில் 80 லட்சம் பேர், இந்தியாவில் 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உலகமெங்கும் 130 கோடி பேர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். இவர்களில் 10 கோடி பேரையாவது புகையிலை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதை இந்தஆண்டுக்கான இலக்காக உலகசுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இன்றைய சூழலில் இந்தஇலக்கை எட்டுவது எளிதானது.

புகை மற்றும் புகையிலைபழக்கத்துக்கு அடிமையானவர்களில் சுமார் 60 சதவீதத்தினர் அப்பழக்கத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு, இந்த கரோனா காலத்தில் வந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. புகைப் பழக்கத்தில்இருந்து மீள நினைப்போருக்கு அதற்கு தேவையான உதவிகளைவழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

இதற்காக பொது இடங்களில் புகை பிடிப்பதை முழுவதுமாக தடுத்து நிறுத்துவது, அனைத்து புகையிலைப் பொருட்கள் மீதான வரியை தொடர்ந்து அதிகரிப்பது, புகையிலைப் பொருட்கள், சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்துவது, மிக முக்கியமாக புகையிலைப் பொருட்களை திணிக்கும் மறைமுக விளம்பரங்களை ஒழிப்பது ஆகிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

புகைப் பழக்கத்தால், நாட்டின் சொத்துகளான இளைஞர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம். அதை தடுக்க, புகையிலைக்கும், புகைப் பழக்கத்துக்கும் அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான ஒருங்கிணைந்த சேவையை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x