Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

மாமல்லபுரத்தில் விதியை மீறிய ஓட்டலுக்கு அபராதம் - மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை : நிராகரித்த பசுமை தீர்ப்பாயம் :

சென்னை

மாமல்லபுரம் பகுதியில் இயங்கும் தனியார் ஓட்டலுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதம் மற்றும் விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களை அகற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஓட்டல் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை பசுமை தீர்ப்பாயம் நேற்று நிராகரித்தது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “மாமல்லபுரம் கடலோரப் பகுதியில் விதிகளை மீறி, கட்டுமானம் செய்ய அனுமதி இல்லாத பகுதியில் ஓட்டல்கள் விரிவாக்கம் செய்துள்ளன. அந்த ஓட்டல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்களை அகற்ற வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், கடந்த ஏப்ரல் மாதம் அளித்த தீர்ப்பில், “இப்புகார் தொடர்பாக ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த ஆய்வறிக்கையின்படி, கடலின் உயர் அலைக் கோட்டு பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை, எந்தவித கட்டுமானமும் ஏற்படுத்த அனுமதி இல்லாத நிலையில், மாமல்லபுரம் பகுதியில் உள்ள ராடிசன் புளூ, ஜிஆர்டி ஆகிய ஓட்டல்கள் 1,100 சதுர மீட்டர் பரப்பளவில் ஓட்டலை விரிவாக்கம் செய்துள்ளது தெரியவருகிறது. எனவே இந்த 2 ஓட்டல்களும், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான அபராதமாக ரூ.10 கோடி செலுத்த வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு ஜிஆர்டி ஓட்டல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அதில், "ஓட்டலில் கட்டிடம் கட்டப்பட்ட பகுதி, கட்டுமானம் செய்ய அனுமதிஇல்லாத பகுதியில் இல்லை. அனுமதிக்கப்பட்ட பகுதியிலேயே கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பைஏற்படுத்தியதற்கான அபராததொகை சரியாக கணக்கிடப்படவில்லை. எனவே இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போதுஅமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரம் தொடர்பாக வல்லுநர்கள் குழுஅமைத்து, அவர்கள் அளித்த ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையிலேயே, அனுமதிஇல்லாத இடத்தில் கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்றவும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதற்கான அபராத தொகை கணக்கீடும் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனு நிராகரிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

200 மீட்டர் தூரம் வரை, எந்தவித கட்டுமானமும் ஏற்படுத்த அனுமதி இல்லாத நிலையில், 1,100 சதுர மீட்டர் பரப்பளவில் ஓட்டலை விரிவாக்கம் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x