Published : 31 May 2021 03:11 AM
Last Updated : 31 May 2021 03:11 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கு - டொமினிகனில் கைதான மெகுல் சோக்சியை இந்தியா அழைத்து வர ஏற்பாடுகள் தீவிரம் : தனியார் ஜெட் விமானம் அனுப்பி வைப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.இதற்காக மத்திய அரசு ஏற்பாடுசெய்த தனியார் ஜெட் விமானம் டெல்லியிலிருந்து டொமினிகன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்திய அரசு சார்பில் தனியார் விமானம் டொமினிகன் வந்துள்ளதை அந்நாட்டு பிரதமர் காஸ்டன் பிரவுன் உறுதி செய்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக மெகுல் சோக்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018-ம்ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிய இவர், ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்தார். தொழில் முறை காரணமாக இவர் அந்நாட்டு குடியுரிமையும் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு இவரை அழைத்துவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. இவர் மீதான வழக்குகளை புலனாய்வுத் துறையும் அமலாக்கத் துறையும் ஆன்டிகுவா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. இவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இந்திய அரசு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், 62 வயதாகும் மெகுல் சோக்சி, தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரமாக்கி வருவதைத் தொடர்ந்து அவர் படகு மூலம் தப்பியோடினார். ஆனால் அவரை டொமினிகன் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த ஞாயிறன்று இவரை காணவில்லை என இவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர் கியூபாவுக்கு தப்பியோட முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது. படகில் தப்பியோடும்போது டொமினிகன் போலீஸார் சோக்சியைக் கைது செய்தனர்.

ஆன்டிகுவாவிலிருந்து அவர் தப்பியோட முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சிரமம் இருக்காது என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுக்கு மெகுல் சோக்சியை அனுப்புவது தொடர்பான வழக்கில் அவர் இந்திய பிரஜை அல்ல என்பதால் அவரை இந்தியாவுக்கு அனுப்பத் தேவையில்லை என அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்ததால், அவரை இந்தியாவுக்கு அனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது இந்தியாவுக்கு அனுப்புவதற்காக மெகுல் சோக்சி மீது தொடரப்பட்ட வழக்குகள், அதன் விவரங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை மற்றும் புலனாய்வுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x