Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM

சென்னை புறநகர் பேரூராட்சிகளில் - கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் ஆட்சியர் ஆய்வு :

திருநீர்மலை பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியர் அ.ஜான் லூயிஸ்.

தாம்பரம்

சென்னை புறநகர் பேரூராட்சிகளில் வீடுகளில் நடைபெறும் கரோனா பரிசோதனை, கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் செங்கை மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையை ஒட்டியுள்ள பேரூராட்சிகளில் கரோனா தொற்றுஅதிகம் உள்ளது. குறிப்பாக சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருப்போரூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளில் நேரில் சென்று பேரூராட்சி சார்பில் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு பொதுமக்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் ஆக்சிஜன் அளவையும் பரிசோதனை செய்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாவட்டஆட்சியர் அ.ஜான் லூயிஸ் திருநீர்மலை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், நந்திரவரம் - கூடுவாஞ்சேரி ஆகிய பேரூராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டார். வீடுகளில் கணக்கெடுப்பாளர்களிடம், கரோனா பரிசோதனை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

கட்டுப்பாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியே வருவதையும், வெளியே இருந்து பொதுமக்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருப்பதை பேரூராட்சி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அந்தபகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அந்த பகுதியிலேயே காய்கறிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னார்வலர்கள் மூலம் அந்தபகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சிகளின் காஞ்சி மண்டல உதவி இயக்குநர் குருராஜன், மண்டல உதவி செயற்பொறியாளர் சங்கர், திருநீர்மலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானு உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x