Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை வாகனங்களில் விற்க அனுமதி - ஜூன் 7 வரை முழுஊரடங்கு நீட்டிப்பு : பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வில்லா முழு ஊரடங்கை ஜூன் 7-ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நாட்களில் காய்கறி, பழங்கள் மட்டுமின்றி, மளிகைப் பொருட்களையும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம்விற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன், தொலைபேசிவாயிலாக வீடுகளுக்கே மளிகைப் பொருட்களை கொண்டு சென்றுகொடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மே 24-ம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் தடுப்பூசி மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், ‘‘அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், மருத்துவநிபுணர்களுடன் நடத்திய ஆலோசனையில், முதலில் ஒரு வாரத்துக்கும், அதன்பின் அடுத்த வாரத்துக்கு தளர்வில்லா ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்திருந்தனர். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து முழு ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பயன்கள், கரோனா பரவல் குறைந்து வருவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த மே 22-ம் தேதி அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில்சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தும் கரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மே 24-ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் மே 31-ம் தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், நோய்த் தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்திலும், இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கை ஜூன் 7-ம் தேதி காலை 6 மணிவரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளேன்.

எனினும், பொதுமக்களின் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை, தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்துநடக்கும். அத்துடன் மளிகைப்பொருட்களையும் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யலாம். மேலும் ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதி அளிக்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் சேர்வதையும் தவிர்க்க வேண்டும். கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு,கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம்பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டதும், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நோய்ப் பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாளை கோவை பயணம்

தமிழகத்தில் முழு ஊரடங்கால் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பொதுவாக தொற்று குறைந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் கோவையில் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை ஒட்டி பதிவாகிறது. இதையடுத்து, அங்கு மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தமிழகஅரசு ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஆக்சிஜன்செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை கோவைக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, கோவையில் கரோனா தடுப்புப் பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக வணிகவரிஆணையர் சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை செல்கிறார். அங்கு, உருவாக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள், கரோனா தடுப்புப்பணிகளை ஆய்வு செய்கிறார். மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x