Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

கரோனா தடுப்பூசி குறித்து பரப்பப்படும் 7 பொய்கள் : மத்திய அரசு விரிவான விளக்கம்

கரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் பொய்கள், வதந்திகள் குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினரும் தேசிய தடுப்பூசி திட்ட குழுவின் தலைவருமான வினோத் பால் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்கரோனா தடுப்பூசி தொடர்பான 7 பொய்கள், வதந்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். கேள்வி, பதில் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளில் இருந்து போதிய கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கவில்லையா?

பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு மத்தியில் இருந்தே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் கரோனா தடுப்பூசி கையிருப்பு குறைவாகவே உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான முன்னுரிமையை பின்பற்றுகின்றன. நம்மை போலவே வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் முதலில் சொந்த நாட்டுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம் கரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு விற்க முன்வந்துள்ளது. வெகுவிரைவில் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும்.

வெளிநாட்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு எவ்வாறு அனுமதி வழங்குகிறது?

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான் அரசுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ள கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி குறிப்பிட்ட நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளை இந்தியாவில் பரிசோதனை செய்யவோ அனுமதி பெறவோ தேவையில்லை.

உள்நாட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா?

கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், மாதத்துக்கு ஒரு கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. அக்டோபர் மாதம் முதல் 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும்.

புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் மாதத்துக்கு 6.5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. அந்த நிறுவனத்தின் ஒரு மாத தடுப்பூசி உற்பத்தியை 11 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் 6 நிறுவனங்கள், ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும்.

பாரத் பயோடெக் நிறுவனம், மூக்கின் வழியாக செலுத்தும் கரோனா மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது. இது ஒரு தவணை கரோனா மருந்தாகும். இந்த மருந்து சந்தையில் அறிமுகமாகும்போது ஒட்டுமொத்த உலகத்துக்கும் நன்மை பயக்கும். மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால் இந்த ஆண்டு இறுதியில் 200 கோடி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும்.

கட்டாய உரிமம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

கரோனா தடுப்பூசிகளை அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தயாரிக்க ஏதுவாக கட்டாய உரிமம்வழங்க வேண்டும் என்று கோரப்படுகிறது. இது சிறந்த திட்டம் கிடையாது. மூலப்பொருட்கள், திறன்வாய்ந்த ஊழியர்கள், பாதுகாப்பான ஆய்வகம் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை கைவிட்டுவிட்டதா?

தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க செய்வது, வெளிநாட்டு தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது என இமாலய பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகள், மாநில அரசு களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மாநில அரசுகளும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த கரோனா உற்பத்தி எவ்வளவு என்பது மாநில அரசுகளுக்கும் தெரியும். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் உள்ள பிரச்சினைகளை மாநில அரசுகள் அறியும்.

சர்வதேச அளவில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் மாநில அரசுகள் கோரியதால் வெளிநாடுகளில் இருந்து கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெரும்பாலான மாநிலங்கள் சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரின. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லையா?

மாநில அரசுகளுக்கு வெளிப்படையான நடைமுறையில் கரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்து வருகிறோம். தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் போது மாநிலங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும்.

அரசியல் தலைவர்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியும். ஆனால் சிலர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

சிறாருக்கு கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?

உலகின் எந்தவொரு நாட்டிலும் சிறாருக்கு கரோனா தடுப்பூசி போடப்படவில்லை. சிறாருக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு இதுவரை எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை. இதுதொடர்பாக சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஆராய்ச்சி, பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சிறாருக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான பரிசோதனை இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளது. சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகள் பரப்பப்பட்டு மக்களிடையே பீதி ஏற்படுத்தப்படுகிறது. சில தலைவர்கள், அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இவர்களுடைய பரிந்துரைகள், ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிறாருக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக முறையாக பரிசோதனை நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள், விஞ்ஞானிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறாருக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x