Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

பாரதி கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் - 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை பிராட்வேயில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை பெருநகர மாநராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். (அடுத்த படம்) சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை உதவியுடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை கொண்ட கரோனா சிகிச்சை சிறப்பு மையம் மக்களின் பயன்பாட்டுக்காக பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. படங்கள்: ம.பிரபு

சென்னை

சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கை வசதிகொண்ட கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராயபுரம் டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையத்தையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழக அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தையும் முதல்வர் திறந்துவைத்தார். அதில் 40 படுக்கைகள் மகளிருக்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 8 மருத்துவர்கள், 16 செவிலியரகள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவர்.

மேலும், இந்த மையத்தில் உடனுக்குடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 10 தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்தவர்களின் உடல்நிலை குறித்து அவர்களது உதவியாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இங்கு எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல்சிகிச்சை அல்லது அவசர சிகிச்சைக்காக 2 ஆம்புலன்ஸ்கள் நிரந்தரமாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோருக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து பொருட்கள் மாநகராட்சி மற்றும் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை சார்பில் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ராயபுரம் எம்எல்ஏ இரா.மூர்த்தி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் பி.என்.தர், டான் பாஸ்கோ கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் போஸ்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x