Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM

காரைக்குடி அரசு மருத்துவமனை கரோனா மையத்தில் - மூச்சுத்திணறலால் 9 பேர் உயிரிழப்பு : சீரான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என புகார்

காரைக்குடி அரசு மருத்துவ மனையில் புதிதாக திறக்கப்பட்ட கரோனா மையத்தில் சீரான ஆக்சிஜன் கிடைக்காததால் அடுத்தடுத்து 9 பேர் மூச்சுத் திணறலால் இறந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

காரைக்குடி ரயில்வே பீடர் சாலையில் பழைய அரசு மருத்துவமனையும், சூரக்குடி சாலையில் புதிய மருத்துவமனையும் செயல்படு கின்றன. இரண்டு இடங்களிலும் கரோனா வார்டுகளில் 116 ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 120 படுக்கைகள் இருந்தன. படுக்கைகள் நிரம்பியதால் கரோனா அறிகுறியுடன் வரு வோருக்கு வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து புதிய மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் 300 படுக்கை வசதி செய்யப்பட்டது. இதில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டது. இந்த மையத்தை நேற்றுமுன்தினம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். அன்றைய தினமே பழைய மருத்துவமனை, புதிய மருத்துவமனைகளில் கரோனா தொற்று மற்றும் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் மகப்பேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று பகல் வரை 9 பேர் மூச்சுத் திணறலால் அடுத்தடுத்து உயி ரிழந்தனர்.

தகவலறிந்த சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, கோட்டாட்சியர் சுரேந்திரன், மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் ஆகி யோர் மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.

இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், ‘நோயாளிகளை அவசர, அவசரமாக புதிய கட்டிடத்துக்கு மாற்றியதாலும், ஆக்சிஜன் சீராகக் கிடைக்காததாலும்தான் இறப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருந்து, மாத்திரைகள் முறையாக வழங்கவில்லை. குடிநீர் வசதியும் இல்லை’ என்று கூறினர்.

ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறுகையில், ‘ஏற்கெனவே 110 பேர் சிகிச்சையில் இருந் தனர். தற்போது தனியார் மருத்துவமனைகளில் இருந்து அதிகளவில் இங்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். இதனால், ஆக்சிஜன் படுக்கைகளில் 179 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 230 டன் திரவ ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மூன்று பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை,’ என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x