Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

முதல் அலையை முற்றிலும் ஒழிக்காததே 2-ம் அலைக்கு காரணம் - அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் : பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா பரவலின் முதல் அலையை முற்றிலும் தடுக்காததுதான் இரண்டாவது அலை ஏற்படக் காரணமாகிவிட்டது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்காமல் முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் நிறுவனத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் கொண்டு செல்லும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, ஒரகடத்தில் உள்ள டெய்ம்லர் இந்தியா வாகன உற்பத்தி நிறுவனத்தில் கரோனா தடுப்பு முகாமைத் தொடங்கிவைத்து பார்வையிட்டார். பின்னர், திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர், கர்ப்பிணிகளுக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பது என்ற 2 இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நோய் பரவும் சங்கிலியை உடைத்தாக வேண்டும்.

அதற்காகத்தான் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை எந்த தளர்வும் இல்லாமல் போட்டிருப்பதால்தான் 2 நாட்களாக அதற்கான பயன் வந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் கரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் இதுமுழு பலனைத் தரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மக்கள்அனைவரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். யாரும் வெளியில் வரக்கூடாது.

கரோனாவில் இருந்து மக்களை காப்பதில் முக்கியமானது தடுப்பூசி. இந்த தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இப்பணியில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று (மே 25) மட்டும் 2 லட்சத்து 24,544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்கும் முன்பு தடுப்பூசி வீணடிப்பு 6 சதவீதமாக இருந்தது. கடந்த 2 வாரங்களில் இது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய 3.14 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளன.

தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்த மத்திய அரசைதொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 18 முதல் 44 வயதுக்குஉட்பட்டவர்களுக்காக ஏற்கெனவே வாங்கப்பட்ட 12.85 லட்சம், அடுத்து வரவுள்ள 11.5 லட்சம் தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி தொற்று அபாயம் உள்ளவர்கள், பெரிய தொழிற்சாலைகளின் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்காக தமிழகத்தில் 267 மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் அரசு பரிசோதனை மையங்களின் திறனைஉயர்த்த தேவையான கருவிகள்வாங்கப்பட்டு, பரிசோதனை எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

பரிசோதனைகள் அதிகரிப்பு

கடந்த ஏப். 8 முதல் மே 7 வரை சராசரியாக 1.15 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் சராசரியாக 1.64 லட்சம் என 50 ஆயிரம்பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே அதிகபட்ச ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் தமிழகத்தில்தான் மேற்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசிதான் இன்று நமது காவல்காரனாக விளங்குவதால், அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கெள்ள முன்வர வேண்டும். தமிழகத்துக்கு போதிய அளவுக்கு மத்திய அரசு தடுப்பூசி வழங்கியுள்ளதா என்றால், தமிழகம் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களும் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றன.

இந்த நெருக்கடியை சமாளிக்கத்தான் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகளை வெளியிட்டுள்ளோம். நேரடியாக தடுப்பூசி வாங்க உள்ளோம். தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதனால்தான் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டேன். அந்த தொழிற்சாலை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய, மத்திய அரசை வலியுறுத்த உள்ளோம்.

தேவையான அளவு தடுப்பூசிகளை சில மாதங்களில் பெற்றதும், தடுப்பூசி போடுவதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளோம். கரோனா முதல் அலையை முற்றிலும் தடுத்து முற்றுப்புள்ளி வைக்காததன் விளைவுதான் 2-ம் அலை ஏற்பட காரணமாக உள்ளது. இரண்டாம் அலையை முற்றிலும் ஒழித்து அதில் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x