Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

குமரியில் கனமழையால் வெள்ள அபாய எச்சரிக்கை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவு முழுவதும் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை நேற்றும் நீடித்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று மாலை வரை மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்தடை நிலவியது. நேற்று காலை வரை அதிகபட்சமாக சுருளக்கோட்டில் 25 செ.மீ, மைலாடியில் 23.6 செ.மீ மழை பதிவாகியிருந்தது.

கனமழையால் நாகர்கோவில் அருகே புத்தேரி செங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் அங்குள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 2,000-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 11,320 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அபாயகரமாக கொட்டியது.

தென்காசி மாவட்டத்திலும் நேற்று 2-வது நாளாக மழை கொட்டிதீர்த்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அபாய அளவைத் தாண்டி கொட்டியது. இங்குள்ள குண்டாறு அணை நிரம்பி வழிந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் விடாமல் சாரல் மழை பெய்தது. பாபநாசம் அணையில் 15 செ.மீ மழை கொட்டியதால், நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 7 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 9 அடியும் உயர்ந்தது.

வைகை அணை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டிய நிலையில், முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. போதுமான நீர் உள்ளதால் முதல்போக பாசனத்துக்கு ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 727 கன அடி வரத்தும், 72 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 129.5 அடியாக உள்ளது. நீர்மட்டம் 130 அடியை எட்ட உள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்துக்கு விரைவில் நீர் திறக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x