Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் - உரிய அனுமதி இன்றி அணை கட்டப்படுகிறதா? : ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை

கர்நாடக மாநிலம் மேகேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே உரிய அனுமதி இன்றி அணை கட்டப்படுகிறதா? என ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு அமைத்துதேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற பகுதியில் ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் மூலம் பெங்களூரு நகரின் குடிநீர் பயன்பாட்டுக்கு 4.75 டிஎம்சி நீரைகொண்டு செல்லவும், அந்த அணையில் 400 மெகாவாட் மின்உற்பத்திசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே, கர்நாடக அரசு, அணை கட்ட திட்டமிட்டுள்ள பகுதியில் கட்டுமான மூலப்பொருட்களை கொண்டு வந்து வைத்திருக்கிறது. இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (2006) விதிகளின் கீழ் உரிய அனுமதி பெறவில்லை. இந்த அணைகட்டப்பட்டால், காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள காப்புக்காடுகள், வன விலங்கு சரணாலயங்கள்அழிந்துவிடும். அப்பகுதிகளை ஒட்டிய 5,252 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலப் பகுதியும் பாதிப்புக்குள்ளாகும். அப்பகுதியின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில், தேசியபசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து கடந்த வாரம் விசாரணை நடத்தியது. பின்னர்அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மேகேதாட்டு அணை கட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மத்திய நீர் ஆணையம், கர்நாடகா மற்றும் தமிழக அரசு ஆகியவை விளக்கம் அளிக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஆய்வு செய்ய, பெங்களூருவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக மண்டல அலுவலகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசின் காவிரி நீராவரி நிகாம் லிமிடெட் நிறுவனம்ஆகியவற்றின் சார்பில் மூத்த அதிகாரிகள், கர்நாடக வனத்துறை அதிகாரி ஆகியோரை கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழு, மேகேதாட்டு அணைதிட்டத்துக்காக ஏதேனும் கட்டுமானபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? உரிய சுற்றுச்சூழல் அனுமதிஇன்றி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதா? அத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வின்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான இழப்பீடு தொகையை நிர்ணயிக்க வேண்டும். அந்த இழப்பீட்டு தொகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய அலுவலர்களால் செலுத்தப்பட வேண்டும். ஆய்வு அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஜூலை 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x